செய்திகள்
Get the latest news regarding our Idaikkadu community.
புலம்பெயர்ந்த தேசங்களில் நம்மவர்களின் கூத்துக்கள்
வருகின்ற சில நாட்களுக்கு குளிர் நாட்களாகவே இருக்கப் போகின்றது., இருப்பினும் இவை அனைத்தையும் கடந்து செல்வது தான் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற அனைவருடைய தினசரி வாழ்க்கையாக அமைந்துள்ளது .இந்த வகையிலே இன்றைய கருத்தாடல்களில் உன்னிப்பாக நாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலே அவதானித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விளைகின்றோம் .குறிப்பாக ஒரு மனிதனுடைய வாழ்வில் முழுமை பெற்று இறுதியாக அவனுடைய வாழ்வை இவ்வுலகில் முடித்துச் செல்லும்போது தமிழ் சமூகங்களிலே மேன்மையான இறுதி வணக்கங்களையும் அல்லது அவர்களுக்குரிய மரியாதைகளையோ நாங்கள் செலுத்துவது வழமையான ஒன்று. அந்த வகையிலே இங்கு நாங்கள் உன்னிப்பாக அவதானித்த சில விடயங்களை வெளிக்கொண்டு வருவது எமது கலாச்சாரத்தை எமது பழக்க வழக்கங்களை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாகவே உணர்கின்றோம்.
இறுதி வணக்கத்துக்கு அல்லது அஞ்சலி செலுத்தும் மண்டபத்துக்கு நாம் செல்லும்போது அவதானித்த சில விடயங்களை பார்ப்போம்.
ஆண்கள் வெள்ளை சட்டை அல்லது கருப்புச்சட்டை அதனுடன் கருப்பு நிறத்தில் ஆன முழுகால் சட்டை அணிந்து வருகிறார்கள்’ ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தும் இடத்துக்குச் செல்லும்போது தலையில் தொப்பி, அதற்கு மேலே குளிருக்கு போடுகின்ற ஓவர் கோட், கண்ணாடியை தலைக்கு மேலே வைத்தல், பாத அணிகளுடன் அந்த இடத்திற்கு செல்லல், மேலும் இரண்டு பட்டனை சட்டையிலிருந்து கழட்டி மேலும் அதற்கு மேலே ஒரு ஓவர் கோட்டை போட்டுக் கொண்டு அந்த அஞ்சலிக்கு அவர்கள் செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் நாங்கள் பாடசாலைக்குப் போகும் போதும் அல்லது பேருந்துக்கு செல்வதற்கோ அல்லது அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது ஒரு ஒழுங்கு முறையில் மற்றவர்களை மதித்து நடக்க பழகிய நாங்கள் எமது கலாச்சாரமும் ஒரு அஞ்சலிக்காக செல்கின்ற இடத்தில் ஒரு கோமாளிக்கூத்தாக நடப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டாமா?
இங்கு எவ்வளவோ அதீத வசதிகள் உள்ள ஒரு தேசம் ,மண்டபத்துக்கு குளிர்காலத்தில் வெப்பமூட்டியும், ஓவர் கோட் வைப்பதற்கு அதற்குரிய வசதிகளும்,பாதணிகள் பத்திரமாக கழட்டி வைப்பதற்குரிய இடங்களும், இன்னோரன்ன சகல வசதிகள் உள்ள இத் தேசத்தில் ஒரு கேலிக்கூத்தாக ஒரு மனிதனுடைய இறுதி அஞ்சலிக்கு நாங்கள் செய்கின்ற செயல்களை என்னவென்று சொல்வது??!!! உறவுகளே! சிந்திப்போம்!! தாய்க்குலத்துக்கு தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனெனில் அவர்கள் முழுமையாக கலாச்சாரத்தையும் அவர்களுக்குரிய அஞ்சலிகளையும் செவ்வனே செய்கின்றார்கள்., என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.வருகின்ற கிழமையும் உறவுகளின் அஞ்சலிக்காக நாம் சந்திக்க இருக்கின்றோம். புதிய ஒரு அத்தியாயத்தை உங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்வோம் நன்றியுடன் .