Articles for 2023

புகலிடப் பொருளாதாரத்தில் தமிழரின் பங்கு.

அருளிலார்க்கு அவ்வுலகமில்லை, பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை என்பது அன்றைக்கல்ல, என்றைக்குமே செல்லுபடியாகும் பொன்னான வாசகம். உலகத்தை விடுங்கள், உன்னிடம் பொருள் இல்லாவிட்டால் கட்டிய மனைவி கூட உன்னை மதிக்கமாட்டாள் என்பதையே இல்லானை இல்லாளும் வேண்டாள் என ஒளவை கூறிச் சென்றாள். இன்றைய உலகில் சுற்றம் சூழலைவிட ஒருவனிடமுள்ள பணமே ஒருவனை நிமிர்ந்து நிற்க வைக்கிறது. பணமுடையவனைத்தான் பதவி, செல்வம் கெளரவம் எல்லாமே தேடி வருகின்றது.

உழைப்புக்கும் சேமிப்புக்கும் பேர்போன எமது இனம் கடந்த நான்கு ஜந்து தசாப்தங்களாக உலகில் எவருமே சந்தித்திருக்காத கொடுமைகளை சந்தித்து வருகின்றது. உள்நாட்ப்போரினால் இனவழிப்பினால் உயிரையாவது காப்பாற்றுவோம் என மேலைத்தேய நாடுகளை நோக்கி ஓடிய எமது இனம் உயிர் அபாயமின்றி இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான பொருளாதார மின்றி இருக்க முடியுமா? அப்படி புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் எம்மவர் மற்றையோருக் கும் சளைத்தவர்கள் அல்ல என பொருளாதாரத்திலும் செழித்து விளங்குகின்றோமா என்பதை நோக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

புலம் பெயர்வின் பலாபலன்கள்.

உண்மையைக் கூறப் போனால் ஆரம்பத்தில் மேலைத்தேய நாட்டவரின் செல்வச் செழிப்பில் காதல் கொண்டு ஓடிவந்தவர்களல்ல நாம். எமது சகோதர இனத்தவரான சிங்களவர் எம்மை அடக்கி ஆள முற்பட்ட போதெல்லாம் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதுவுமே பயனளிக்காமல், நாளுக்குநாள் எம்மீது மேற்கொண்டுவரும் வன்முறைகள் அதிகரிக்க எம் உயிருக்கே அந் நாட்டில் உத்தரவாதமில்லை என்ற நிலையில் உள்நாட்டில் இருந்து சாவதை விட எமக்கு அபயமளிக்கும் எந்த நாட்டிலாவது சென்று பிழைத்துக் கொள்வேமே என்ற நோக்கில் ஜரோப்பிய நாட்டிலும் அமெரிக்க நாட்டிலும் அந்நாட்டவர் எமக்கு அடைக்கலம் தந்ததால்தான் எம்வாழ்வு இங்கு வேரூன்றி உள்ளது.

சரியோ, பிழையோ நன்மையோ தீமையோ எந்த நிகழ்விலும் நூறுவீத நன்மையும் இருப்பதில்லை! நூறுவீத தீமையும் இருப்பதில்லை!. புலம் பெயர்ந்துள்ள நாம் இந் நாடுகளில் மெல்ல மெல்ல கல்வி கலாச்சார பொருளாதார நிலையில் எம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டாலும் , ஏற்கனவே சிறுபான்மை இனமான நாம் எம்தாயக மண்ணைவிட்டு வெளியேறியது அம் மண்ணில் எம் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விட்டது, சனத்தொகையில் பலமிழந்தநாம் மேலும் பலமிழந்து விட்டோம். எனினும் அன்றைய சூழலில் இதைத்தவிர வேறு வழியேதும் இன்மையால் கணிசமான தொகையினர் மேலைத்தேய நாடுகளில் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.

புலம் பெயர் நாட்டில் எமது செயற்பாடுகள்.

என்னதான் இருந்தாலும் எம் தாயகத்தைவிட புலம்பெயர் நாடுகள் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது. பொருளாதாரம் உயர்வடைந்துள்ளது. வளமான தேசம் பரந்துள்ளது, நீர்பஞ்சமில்லை, நிலப் பஞ்சமில்லை, அதனால் பசி பட்டினி ஏதுமில்லை. எம் மண்ணில் பலர் உயிருக்கு உத்தரவாதம் தேடி இங்கு ஓடி வந்தவர்களே தவிர உயர் கல்வி கற்றவர் அதிகம் இலர். எனினும் இங்கு மனித வலுவின் தேவை அதிகம் இருந்ததனால் உடல் உழைப்புக்கான வேலையை பெறக்கூடியதாக இருந்தது. அவர்களின் உடல் இங்கிருந்தாலும் உள்ளம் தாய் நாட்டையும் அங்குள்ள உறவினர்களையுமே சுற்றிச் சுற்றி வந்தது. தாயக மக்கள் போர்க்கால சூழ்நிலையிலும் பொருளாதாரத் தடைகளாலும் தமது தொழில் நடவடிக்கைகளை திருப்திகரமாக மேற்கொள்ள முடியவில்லை. எனவே அவர்களது பொருளாதாரம் சுருங்க ஆரம்பித்தது. கணிசமான தொகையினர் புலம் பெயர்ந்துள்ள தமது உறவுகள் அனுப்பும் பணத்தையே நம்பி இருக்கலாயினர். புலம்பெயர் உறவுகள் பனியிலும் குளிரிலும் கஸ்டப்பட்டு உழைத்து தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம் நாணய மாற்று விகிதத்தில் பலமடங்கு பெறுமதியாக கிடைப்பதால் அவர்கள் போர்க்கால சூழ்நிலையிலும் பட்டினிச்சாவை எதிர் கொள்ளவில்லை. தமது உறவுகளின் மேல் கருணை கொண்டு அவர்கள் அனுப்பும் பணத்தில் சிலர் குடித்து வெறித்து ஆடம்பரச் செலவினைச் செய்து ஊதாரித்தனமாக வாழ்வது மிகவும் கவலைக்குரியதே!. இரண்டு மொழிகளையும் மூன்று இனங்களையும் மட்டுமே கொண்ட எமது தாய் நாடு முன்னேறாமல் இருப்பதற்கும் உலகிலுள்ள அத்தனை மொழிகளையும் அத்தனை இனங்களையும் கொண்ட இந்நாடு முன்னேறியதற்கும் முக்கிய காரணமாக உள்ளது எமது தாய் நாட்டு அரச இயந்திரத்தின் தவறான செயற்பாடே. அங்குள்ளோர் கடமையை கடமைக்காகவே செய்கின்றனர்.

இங்குள்ளோர் கடமையை கடமையாகச் செய்கின்றனர். அங்கு நேரம் போனல் சம்பளம் இங்கு வேலை செய்தால்தான் சம்பளம், எம்நாடு எப்படி உருப்படும்.

புலம் பெயர்வின் பாரிய இழப்பு.

ஒரு சமூகத்தில்,ஒரு இனத்தில் பொருளாதாரம் எவ்வளவு பலமானதோ அதேபோல் அவர்களின் மனிதவளமும் அவ்வளவு பலமானதே! இன்றைய தேதியில் இந்தியாவிலும் சீனாவிலும் ஏழைமக்கள் அதிக அளவில் இருந்தபோதும் அவை உலகில் முன்ன்ணி நாடுகளில் ஒன்றாக இருப்பதன் காரணம் அதன் மக்கள் தொகையின் அளவே, எமது தாயக மண்ணில் மற்றைய இரு இனங்களும் சனத்தொகையில் பெருகிய நிலையில் எமது சனத்தொகை சுருங்கி வருவது மிகவும் பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளது, நான் சிறுவனாக இருந்தபோது எமது குடும்பத்தில் சராசரி அங்கத்தவர் 8, 10 ஆக இருக்கும், இந்த விகிதத்தில் குடிசனம் பெருகியதால் தோட்ட நிலம் அல்ல குடியிருக்க வீடு கட்டவே நிலம் இல்லாது போய்விடும் என அஞ்சியதுண்டு. ஆனால் என்னே காலத்தின் கோலம் அன்று இருக்க இடமில்லை, இன்று இருக்கச் சனமில்லை. அதற்கான காரணங்கள் வருமாறு;

· குடும்பக் கட்டுப்பாடு காரணமாக குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை குறைவடைந்து விட்டது.

· போர்க்கால சூழல் காரணமாக போராடி உயிரிழந்தோர், அரச படையால் இன அழிப்பு செய்யப்பட்டோர் என இழந்த பல லட்சம் உயிர்கள்.

· புலம்பெயர்ந்து இந்தியாவிலும், மேற்கத்தைய நாட்டிலும் குடிபெயந்ந்தோர்.

அப்போது படிப்பதற்கு பாடசாலைக்கு கட்டிடம் இல்லை, இப்போது வெளி நாட்டுக் காசில் பாடசாலை நிமிர்ந்து நிற்கிறது. படிக்கத்தான் மாணவர்கள் இல்லை. எத்தனை வீடுகள் குடியிருக்க ஆளில்லாமல் பூட்டிக் கிடக்கின்றன. இராணுவம் எமது நிலத்தையும் வீடுகளையும் பிடிக்கிறான் என்று முறைப்படுகிறோம் என்றால் வீடுகளும் நிலங்களும் வெறுமனே இருப்பதும் அதற்கு ஒரு காரணம்தான். அழகான சீப்பு உள்ளது. தலை மொட்டையாகி விட்டது. குமரிக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. மாப்பிள்ளை கிடைத்தபோது குமரி கிழவியாகி விட்டாள். எல்லாமே தலைகீழாகத்தான் போய்விட்டது.

புலம் பெயர்வின் பாரிய வெற்றி

முன்னரே குறிப்பிட்டேன் எந்த நிகழ்விலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டென்று, புலம் பெயர்வில் தீமை மட்டுமல்ல நன்மையும் இருக்கத்தான் செய்கிறது. எம்தமிழ் மக்கள் தொழிலை இழந்து உள்நாட்டுப்போரில் தாங்கணாக் கொடுமையை அனுபவித்த போதும் பட்டினிச் சாவை எதிர்நோக்கவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் புலம்பெயர் உறவுகள் வேண்டியபோதெல்லாம் உறைபனியிலும் தாம் உறையாமல் உழைத்து அங்கு அனுப்பிய உண்டியல் பணமே. அந்த உண்டியல் பணமே அவர்கள் உண்டியை நிரப்பியது. இவற்றிற்கெல்லாம் மேலாக எமது தமிழ்மக்கள் எவருமே வெளியேறாது இருந்திருந்தால் பட்டினியால் பலபேர் செத்துமடிந்திருப்போம். எத்தனையோ போராட்டத்திற்கும் இழப்புகளுக்கும் மத்தியிலும் எம்பூமி எம் இனம் எம் பண்பாடு என இன்னமும் எழுச்சியுடன் போராடி வருகிறோமே எதனால்? புலம் பெயர் உறவுகள் எமக்களித்த வளமும் நாம் தேடிக் கொண்ட கல்வியறிவுமே அதனால்தான். எமது தாயக மண்ணில் தரப்படுத்தல் என்னும் முறையால் பல்கலைக்கழகத்திற்கு புகவிடாமல் எம் கல்வியை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்களே, இங்கு அவர்கள் உயர்கல்வியில் பல சாதனைகளைப் படைத்து கொடிகட்டிப் பற்க்கிறார்களே அதற்கு களம் அமைத்துக் கொடுத்த்து புலம்பெயர் மண் அல்லவா?

புலம் பெயர் மண்ணில் எம் பொருளாதாரம்.

இன்றைய பொழுதில் மூன்று தலைமுறைத் தமிழர்கள் புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து வருகின்றனர், முதலாவது எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தாயகப் போர் உக்கிரமடைந்தபோது தஞ்சம்கோரி புலம் பெயர்ந்து இங்குவந்து இப்போது ஐம்பது வயதைத் தொட்டு நிற்கும் எம் உறவுகள். இரண்டாவது அவர்களால் இங்கு வரவழைக்கப் பட்ட அவர்களின் பெற்றோர், மூன்றாவது இங்கு பிறந்த அவர்களின் பிள்ளைகள். அதாவது தமது பேரப் பிள்ளைகள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் டொச்சிலும் கேட்கும் கேள்விகளை விளங்க முடியாது விழிபிதுங்கி நிற்கும் பாட்டன் பாட்டிகள். தமது பிள்ளைகள் ஆங்கிலத்திலும் வேறு மொழியிலும் கேட்கும் கேள்விகளுக்கு தமிழில் பதில் கூறும் பெற்றோர், தமக்கிடையே ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் டொச்சிலும், சரளமாக உரையாடும் பேரப் பிள்ளைகள்.

இம் முன்னேற்றதிற்கெல்லாம் காரணமாகத் திகழ்ந்து இங்கு முதலில் வந்து பாதையைத் திறந்து விட்ட, இப்போது இளமையும் இல்லாமல் முதுமையும் இல்லாமல் இடையில் நிற்போரே!. எம் தாயக மண்ணுக்கும் பாலமாகத் திகழ்பவரும் இவர்களே!. இவர்கள் செய்த சாதனை மகத்தானது, எம் சமுதாயத்தின் தூண்கள், இவர்கள் தாயகத்திலிருந்து புறப்பட்டு இன்றுவரை இவர்கள் செய்த தியாகம் சமானியமானதல்ல! இன்று எம்மை வாழவைக்கும் அந்நியதேசம் எம்மை ஏற்றுக்கொண்டாலும் மனம்விட்டு எம்மை வரவேற்கவில்லை, இங்கு வந்து சேர்வதற்கு பாரிய தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. சட்டபூர்வமற்ற முறையில் வந்து பல நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டவர்கள் சித்திரவதையையும் அனுபவித்தவர்கள் இவர்கள். சிலர் இறந்தும் விட்டார்கள். பலர் திரும்பிப் போய்விட்டார்கள், சிலர் இன்னமும் சிறையில் வாடுகிறார்கள்.

எப்படியோ வந்து சேர்ந்தவர்கள்தமக்கு முன்னால் உள்ள பொறுப்பை உணர்ந்து ஒரு அசுர வெறியுடன் உழைத்தார்கள். இரவு பகல் பனி குளிர் பாராது அவர்களின் உழைப்பு ஊருக்குச் சோறுபோட்டது, ஊர் மண்ணில் பாடசாலைகளையும் கோவில்களையும் உயர்ந்து நிற்க வைத்தது. உறவினர்க்கு உதவி செய்தது, தன்னைப்போல கஸ்டப் பட்டவர்களை இந் நாட்டிற்கு எடுத்து விட்டது, எவரெல்லாம் நாட்டுக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அவர்களுக்கெல்லாம் அள்ளி வழங்கியது. இப்படியான பலரிடம் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. கடன்தானே உள்ளது என்பதை நாம் பிழையாக எடைபோட முடியாது. அவர்கள் பெரும் பணக்காரர்களே! அவர்களின் சொத்து மேலே சொன்னபடி தாயகத்தை உயர்த்தி விட்டது, நண்பனைக் கூப்பிட்டது, எம் தாய்நாட்டுக்கு வாரிவழங்கியது, இவை எல்லாம் அவர்களின் ஜந்தொகைக் கணக்கில் சேர்த்துப் பார்தால் அவர்கள் பூச்சியம் அல்ல, ராச்சியம்தான்.

சரி, அடுத்தது என்ன?

ஊருக்கு உழைத்தது போதும் உழைத்தது எல்லாம் அவர்களுக்கு கொடுத்து அவர்களை சோம்பேறிகளாக்கி விட்டோம். இனியாவது எமக்காக வாழ்வோம் எனப் பலர் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இப்படி சில காலத்திற்கு முன்பே சிந்தித்தவர்கள் முன்னமே வீடு வாங்கி விட்டார்கள். தம் பிள்ளைகளைப் படிப்பித்து பட்டதாரி ஆக்கிவிட்டார்கள். தாம் படிக்காததால். செய்த கிளீனிங் வேலையை எமது பிள்ளையும் செய்யத்தேவை இல்லை என பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்து விட்டார்கள். இனி எம் எதிர்காலம் அவர்கள் கையில்தான் இனி மெல்ல மெல்ல எம் தாயகத்திற்கும் அவர்களுக்குமான உறவு குறையத்தான் போகிறது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை எம் வழிக்கு இழுக்கப் பார்க்கிறோம். இம் மண் அவர்களை தன் வழிக்கு இழுக்கப் பார்க்கிறது.. நாம் உயிருள்ளவரை எம்முடன் அவர்களை வைத்திருக்கலாம். அதன் பின் அவர்களை இந்த மண் மெல்ல மெல்ல உள் வாங்கத்தான் போகிறது. அவர்களும் இந்த மண்ணை உள்வாங்கும் போது………. அதைக் காண்பதற்கு நாம் உயிருடன் இருக்க மாட்டோம்.

சில விடயங்களை தாமதப்படுத்தலாமே தவிர தடுத்துவிட முடியாது. காந்தி இல்லாவிட்டால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்காதா? கிடைத்திருக்கும். சற்று தாமதமாக அவ்வளவே! நியூட்டன் இல்லாவிட்டால் புவியீர்ப்பு விதியை எவரும் கண்டுபிடித்திருக்க மாட்டார்களா? கண்டுபிடித்திருப்பார்கள். சற்று தாமதமாக அவ்வளவே. எங்கள் பிள்ளைகளை நாம் எத்தனை காலம்தான் எம் கட்டுப்பாடுக்குள் வைத்திருக்க முடியும். காலம் மிகவும் பலமானது. காலனும் காலத்திற்கு கட்டுப்பட்டவனே. காலம் வருமுன் அவன் எவரையும் அணுக முடியாதல்லவா?

புலம்பெயர் மண்ணின் பொருளாதார வளம் யாரிடம் தங்கியுள்ளது?

இந்தமண்ணின் மைந்தர்களிடம்தான். கனடாவை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு மேற்பட்ட இனங்கள் இங்கு வாழ்ந்து வந்தாலும் கறுப்பரும் வெள்ளையரும் சீனர்களும்தான் பெரும்பான்மை இனத்தவராக வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் எம்மைவிட பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்பதற்குக்காரணம் அவர்கள் இம்மண்ணில் அன்றுதொட்டே, ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருபவர்கள். நாம் நேற்று வந்தவர்கள். இந்த குறுகியகாலத்தில் அவர்களுடன் ஒப்பிடும்போது எமது வளர்ச்சி அபரிமிதமானது. எம்மினத்தவரும் கல்வியில், வணிகத்தில், உயர் பதவிகளில் முன்னணியில் திகழ்கின்றனர். பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்துவரும் பலர் இன்னமும் வாடகைவீட்டில் வாழ்ந்து வரும்போது எம்மவரில் பெரும்பான்மையோர் சொந்தவீட்டில் குடியிருக்கின்றனரே. மற்றையசமூகத்துப்பிள்ளைகள் பாதியில் படிப்பை நிறுத்திவிடும்போது எமது பிள்ளைகள் பட்டதாரியாகிவிடுகின்றனரே. எம்மவரில் பலர் வீடு விற்பனை முகவர்களாகவும் காப்புறுதி முகவர்களாகவும் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் சட்டவல்லுனர்களாகவும் கல்விமான்களாகவும் தொழில்

அதிபர்களாகவும் மாறிவிட்டனரே இப்போது கனடிய அரசியலிலும் தடம் பதிக்க ஆரம்பித்துவிடனரே.

இது எமது அசுர வளர்சி அல்லவா? இது புகலிட பொருளாதாரத்தில் எமது பாரிய பங்களிப்பு அல்லவா?

அதேவேளை எம் பிள்ளைகளும் எதிர்காலத்தில் செல்வத்திலும் கல்வியிலும் கொடிகட்டிப் பறப்பார்கள். ஏனெனில் அவர்கள் உழைப்பாளிகளான எமது வித்துக்கள், கல்விமான்களான எமது சொத்துக்கள் . எதிர்காலத்தில் இந் நாட்டுக் கொடியுடன் எம் கொடியும் சேர்ந்தே பறக்கும், ஆம் உயரப் பறக்கும்.

பொன் கந்தவேல்

ஸ்காபுறோ, கனடா

துயர் பகிர்வு

திருமதி. முருகையா சின்னத்தங்கம் திருகோணமலையில் 30-05 -2023 செவ்வாய்க்கிழமை மாலை 1-50 மணியளவில் இறைபதமடைந்தார்.
வட்டவளவு, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், புதியபூமி, இடைக்காடு திருகோணமலை இராஜவரோதயம் சதுக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி முருகையா சின்னத்தங்கம் திருகோணமலையில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற நாகமுத்து – மாணிக்கம் தம்பதிகளின் மகளும், காலம் சென்ற பொன்னையா – பொன்னம்மா ஆகியோரின் மருமகளும், முருகையாவின் அன்பு மனைவியும்,, விஜிதா, மகிபன், ஆகியோரின் அன்புத் தாயாரும், சுரேஸ்குமார், வனிதா ஆகியோரின் அன்பு மாமியும், , யஷ்மிகன், லவிட்சன் , கிசாலினி, நிகலினி ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார் ஆவார்.
மேலும் அன்னார் சிற்றம்பலம், முருகேசு, கந்தசாமி, வள்ளிநாயகி, நாகேஸ்வரி, இராமநாதன், மகேந்திரன், மகேஸ்வரன், செல்வபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
மேலும் அன்னார் தேவசிகாமணி, சிறீவள்ளி, இராஜேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சிவபாதசுந்தரம் ,ராகினி, மைதிலி, கலா சிவலோஜினி, காலம் சென்றவர்களான தியாகராஜா, கனகராஜா, வேலாயுதபிள்ளை, கண்மணீ,அன்னம் மற்றும் சிவகாமி, மீனாட்சி, நடராசா ,ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் 04 – 06 -2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணியளவில் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; மகள் ; – 94773414526
மருமகன் ; – 94773430278
மகன் ( கனடாஃ ) ;- 514 692 6910

ஆழாத் துயர்

திரு முருகையா சிவலிங்கம் இன்று 21/04/ 2023 Swissல் உள்ள Basel என்ற நகரத்தில் ஆழா துயரில் ஆர்த்தி விட்டு இவ்வுலகை விட்டு நீர்த்தார். அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலதிக விவரம் பின்னர் அறிய தரப்படும்.

இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா

இடைக்காடு மகாவித்தியாலய நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல்
காலம் : பங்குனி 03 2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி
இடம் : அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆசிரியர் அறப்பணி நிலையம், இடைக்காடு

சமூகம் அளித்தோர் விபரம்

  1. பேராசிரியர்.கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி (பழைய மாணவரும் இளைப்பாறிய கல்வியற் துறை பேராசிரியரும்)
  2. திரு.நாரயணபிள்ளை சுவாமிநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய உதவி கல்விப் பணிப்பாளரும்)
  3. திரு.வல்லிபுரம் வைத்திலிங்கம் (பழைய மாணவரும் இளைப்பாறிய நிர்வாக உத்தியோகத்தரும்)
  4. திரு.கந்தசாமி முருகவேல் (பழைய மாணவரும் இளைப்பாறிய வலயக் கல்விப் பணிப்பாளரும்)
  5. திரு.தம்பிராசா கிருபாகரன் (பழைய மாணவரும் வலயக் கல்விப் பணிப்பாளரும்)
  6. திரு.அரசகேசரி வேலாயுதர் (பழைய மாணவரும் கோட்டக் கல்விப் பணிப்பாளரும்)
  7. திரு.சின்னதம்பி கருணா (பழைய மாணவரும் நில அளவை அத்தியட்சகரும்)
  8. திருமதி.மங்களேஸ்வரி வேலுப்பிள்ளை (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  9. திருமதி,பரமேஸ்வரி கதிரவேலு (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  10. திருமதி.ஆனந்தஈஸ்வரி நாகநாதன் (பழைய மாணவரும் இளைப்பாறிய ஆசிரியையும்)
  11. திரு.ஜெயகுமார் சுப்ரமணியம் (பழைய மாணவர் – கனடா)
  12. திரு.சுதர்சன் செல்லத்துரை (பழைய மாணவர் – கனடா)
  13. திரு.நாரயணபிள்ளை இடைக்காடர் ஈஸ்வரன் (பழைய மாணவர் – கனடா)
  14. திரு.நந்தகுமார் இராசையா (பழைய மாணவர் – ஐக்கிய இராச்சியம்)
  15. திரு.கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்து (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
  16. திருமதி.பவானி கிருஷ்ணமூர்த்தி (பழைய மாணவர் – அவுஸ்ரேலியா)
  17. திருமதி.சிவச்செல்வி குகதாசன் (பழைய மாணவர் -அவுஸ்ரேலியா)
  18. திருமதி.கோமளா கருணாகரன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  19. திரு.சிவகுருநாதன் கருணாகரன் (நலன் விரும்பி)
  20. திருமதி.வரதலட்சுமி ஸ்ரீவடிவேலு (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  21. திருமதி.தயவாதி சிவஞானசீலன் (பழைய மாணவரும் ஆசிரியையும்)
  22. திரு.செல்லத்துரை செல்வவேல் (பழைய மாணவரும் ஆசிரியரும்)
  23. திரு.சுப்பிரமணியம் செல்வகுமார் (பழைய மாணவரும் மாகாண உள்ளக கணக்கு உத்தியோகத்தரும்)
  24. திரு.கதிரவேலு நகுலன் (பழைய மாணவரும் பதவிநிலை முகாமைத்துவ உத்தியோகத்தரும்)
  25. திரு.கந்தசாமி கஐன் (பழைய மாணவரும் பழைய சங்க செயலாளரும்)
  26. திரு.சிவஞானம் கார்த்தீபன் (பழைய மாணவர், ஆசிரியர், பழைய சங்க பொருளாளர் மற்றும் கலைமகள் வாசிகசாலை தலைவர்)
  27. திரு.சிவஞானசுந்தரம் சிறிபதி (ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும்)
  28. திரு.கந்தசாமி கேதீஸ்வரன் (பழைய மாணவரும் இடைக்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும்)
  29. திரு.வை.கதிர்காமநாதன் (பழைய மாணவர்)

கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அறிக்கை
2026 ஆம் ஆண்டு தை 16 ஆம் திகதி எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கப்பட்டு, அது தொடர்பாக புலம்பெயர்ந்த உறவுகளின் சிந்தனை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
அதன் முதற் கட்டமாக ஆரம்பப் பிரிவில் சகல வசதிகளுடன் கூடிய ஆரம்ப பிரிவு கட்டடத்தை மூன்று மாடிகளாக கட்டலாம் என்ற எண்ணக்கரு முன் வைக்கப்பட்டது. அக் கருத்து வரவேற்கப்பட்டதுடன், மாற்று கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன அவை வருமாறு:
இடைநிலை பிரிவு பிரதான மண்டபம் மீள் புதுப்பித்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அமரர்.நமசிவாயம் அவர்களின் கட்டடம் மீள் திருத்த வேண்டிய அவசியம் பற்றி கூறப்பட்டது.
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாதிக்க முடியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
பாடசாலை மைதானம் உருவானதை போல எதையும் செய்ய முடியும் என்று வலியுறுத்தினார்கள்.
இடைக்காட்டின் வரலாறு மிகச் சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் ஆலோசிக்கப்பட்டது.
இடைக்காட்டின் வீதிகள் சீரமைக்கப்பட்ட பின் பெயரிடப்பட்ட வீதியாக மாற வேண்டும் என்றும் கருத்துரைக்கப்பட்டது.
புலம் பெயர் உறவுகள் தொடர்ச்சியாக நிதி உதவி வழங்க முடியாது என்பதால், முன் பள்ளிக்கு குறிப்பிட்ட நிதி வழங்கியது பற்றி திரு க. முருகவேல் அவர்கள் தமது கருத்தை கூறினார்.
பேராசிரியர்.க.சின்னத்தம்பி பின்வரும் கருத்தை கூறினார். ஆரம்பப் பிரிவு மற்றும் இடைநிலை பிரிவிற்கு இடையேயான வீதியை மாற்றுவது மற்றும் அதன் கடினத் தன்மை பற்றி திரு.கருணா விளக்கமளித்தார்.
பாடசாலை மாணவர் எண்ணிக்கை அதிகரித்து சித்தி வீதம் அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனவும் உயர்தர பிரிவு விஞ்ஞானத்துறை அச்சுவேலி செல்ல வாய்ப்பு உள்ளது அதை தடுப்பதற்கான செயல்பாடுகளை எமது பாடசாலை சமூகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை திரு.கிருபாகரன் அவர்கள் கூறினார்.
எமது பாடசாலையின் சித்தி வீதம் யாழ் மாவட்டத்திலே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக திரு.அரசகேசரி அவர்கள் கூறினார்.
நூற்றாண்டு விழா ஞாபகார்த்த கட்டடம் கட்டுவது பற்றிய முடிவை எடுக்க திரு.முருகவேல் அவர்கள் வலியுறுத்தினார்.
வீதியை மாற்றுவது கடினமாகையால் ஏனைய செயற்பாடுகள் பற்றி கவனம் எடுக்க கலந்துரையாடப்பட்டது. யதார்த்தமாக செயல்பட வேண்டும் என பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பாடசாலை அழகு படுத்த வேண்டும், இருண்ட பாடசாலை போன்ற தோற்றத்தில் இருந்து வெளிச்சமான மகிழ்ச்சிகரமான அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்ற கருத்தை திரு.க.முருகவேல் அவர்கள் கூறினார்.
பாடசாலை அபிவிருத்திக்கு அனைவரது மனங்களும் மாற்றம் அடைய தக்க வகையில் செயல்படுத்த வேண்டுமென பேராசிரியர்.க.சின்னத்தம்பி அவர்கள் கூறினார்.
பொறியியல்துறை, நில அளவைத்துறை சார்ந்தவர்களுடன் முதலில் கலந்துரையாடி கட்டட அமைப்பு பற்றி தீர்மானித்து, அதன் அனுமதிக்காக திணைக்களங்களை அணுக வேண்டும். இந்த பொறிமுறை ஒழுங்கில் செயல்பட வேண்டும என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
நிதி செயற்பாடு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. நிதி செயற்பாடு பற்றி திரு.கிருபாகரன் அவர்கள் கூறுகையில் நிதி பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பிடப்படல் வேண்டும் என்ற கருத்தை கூறினார்.
எழுந்த மானமாக கட்டிடம் தெரிவு செய்யக்கூடாது அமைவிடம் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது
இறுதி முடிவாக ஆரம்பப் பிரிவு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டும். விழாவிற்கான நூல் வெளியீடு, போன்ற செயல்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோருடன் இணைந்து கலந்துரையாடி முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதிபருடன் கதைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இக் கருத்துரையாடல் ஆரம்ப முயற்சியாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமாகவும் இனிதே நிறைவு பெற்றது .அனைவரது கருத்து பரிமாற்றங்களும் உள் வாங்கப்பட்டு அடுத்த கட்ட கருத்தாளுகைக்காக எமது செயல்கள் ஆரம்பமாகிறது .
நன்றி மீண்டும் அடுத்த கருத்துப் பகிர்வுடன் சந்திப்போம்.

அதிபருடான கலந்துரையாடல் 01.04.2023
சமூகமளித்தோர்
திரு.கு.அகிலன் (அதிபர்)
திரு.கு.வாகீசன் (முன்னாள் அதிபர்)
திரு.அருந்தவநேசன் (முன்னாள் அதிபர்)
திரு.க.முருகவேல்
திரு.வே.அரசகேசரி
திரு.க.நகுலன்
திரு.க.கஜன்
திரு.சி.சிறிபதி
திரு.செ.செல்வவேல்
திரு.க.சூரியகாந்தன்
திரு.கஜேந்திரன்
கலந்துரையாடப்பட்ட விடயம் இணைக்கப்பட்டுள்ளது

This image has an empty alt attribute; its file name is picture_2-726x1024.jpg

இனிய புத்தாண்டு

சித்திரை புத்தாண்டை கொண்டாடும் அனைத்து சகோதர நண்பர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இடைக்காடு உறவுகள் அங்கு வாழ்கின்ற விவசாய பெருமக்கள் அனைவருக்கும் இடைக்காடு வலைய இணைய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ் புது வருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ்

தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இடைக்காடு வாழ் இளைஞர்களால் சிநேகபூர்வ துடுப்பாட்ட, உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் மணமானவர் எதிர் மணமாகதோர் என்ற அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே வியாழக்கிழமை 4 மணியளவில் துடுப்பாட்டமும். வெள்ளிக்கிழமை 8 மணியளவில் கரப்பந்தாட்டமும், சனிக்கிழமை 5 மணியளவில்உதைபந்தாட்டம் என்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் இடைக்காடு இளைஞர் குழு அழைக்கின்றது.

துயர் பகிர்வு செய்தி

திருமதி ஜெயராணி யோகிராஜ் இன்று 12/ 4/ 2023 கனடாவில்இறைபதம் அடைந்துள்ளார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிய தரப்படும் .

Service Details :

Sunday, April 16th, 2023 5:00 P.M – 9:00 P.M

Monday, April 17th,2023 5:30 A.M – 7:30 A.M

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue

MARKHAM,ON

அன்னாரின் குடும்ப துயரத்தில் இடைக்காடு வலை இணைய குழுமமும் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

தகவல்: குடும்பத்தினர்.

கல்வி சுற்றுலா

யா/ இடைக்காடு மகா வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் 2022., மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா.